திருக்குமரனின் விழுங்கப்பட்ட விதைகள் என்ற கவிதை நூலின் மீதான என்பார்வை.




                         தமிழ் மொழியினதும், இனத்தினத்தினதும் நீண்ட வரலாற்றுத் தொன்மையை தமிழில் எழுந்த இலக்கியங்களே வெளிப்படுத்தி  நிற்கின்றன. இன்றைய நவீன வரலாற்று ஆய்வுகளுக்கு முந்திய காலகட்டத்தில் எந்தவொரு இனத்தினுடைய வரலாற்றையும் நோக்கவேண்டுமாயின் அவ்வின மக்களின் இலக்கியப்படைப்புக்களிலிருந்தே வரலாற்றைத் தேடவேண்டியிருந்தது. அந்தவகையில் வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவிற்கு தமிழ் மொழி இலக்கிங்கள் பெருகிக் கிடப்பதைக் காணமுடிகிறது இவை படைப்பாளிகளின் உணர்வுகளையும், காலத்தையுமே வெளிப்படுத்தி நிற்கின்றன.

இதனால் தான் என்னவோ இலக்கியம் என்கின்ற போது இலக்கு - இயம் : அதாவது இலக்கைச் சொல்லுதல் ஒரு கவிஞனுடைய அல்லது படைப்பாளியினுடைய நோக்கத்தைச் சொல்லுதல் என விளக்கங் கொடுக்கப்படுகிறது.

இலக்கியம் காலத்தைக் காட்டும் கண்ணாடி ஆகவே ஒரு காலத்தில்; எழுந்த இலக்கியங்கள் அக்காலத்தின் சமகால நிகழ்வின் விம்பமாகவே காணமுடியும். தமிழ்மொழியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுந்த இலக்கியங்களும் சரி இன்றைய சமகால இலக்கியங்களும் சரி அந்தந்த காலச்சூழலை மிகத் தெளிவாக சித்தரித்துக் காட்டுவதை நோக்கமுடிகிறது.

தமிழிலக்கிய வரலாற்றில் சேழர்காலத்தினை பொற்காலம் என்கிறோம். ஏனெனில் அக்காலத்தில் காதல், செல்வம், வீரம் மலிந்துகிடந்தது. அங்கே கொடுப்பாரும் இல்லை கொள்வாருமில்லை. நாம் ஒரு பெரும் பேரரசின் சொந்தக்கரர்கள் என்ற பெருமித உணர்வு மக்கள் மத்தியில் பதிந்து கிடந்தது.

இத்தகைய சூழலில் எழுந்த இலக்கியங்களுக்கு சிறந்த கருப்பொருட்கள் கிடைத்தன. ஆகவே சோழர்காலப்படைப்பாளிகள் மிகக் கொடுத்து  வைத்தவர்களே. ஆனால் அவர்களுக்குப்பின் ஓராயிரம் ஆண்டுகால இடைவெளிக்கு ஏற்ற கருப்பொருட்கள் தமிழ்ப்படைப்பாளிகளுக்கு கிடைக்காமல் போயிற்றே ஆனால் கடந்த கால்நூற்றாண்டு ஈழத்துக் கவிஞர்களுக்கு எந்தப் படைப்பாளிகளுக்கும் கிடைக்காத மிக அருமருந்தன்ன கருப்பொருட்கள் கிடைத்தனவே.

காதல், வீரம், சோகம், விரக்தி, கொலைக்களம் என எண்ணுதற்கரிய மனித வார்த்தைகளினால் வர்ணிக்க முடியாத மன உணர்வுகள் ஈழத்துக் கவிஞர்களை ஆட்கொண்டதே அந்த உணர்வுகளின் வெளிப்பாடுதான் இன்று எம்முன்னே விரிந்து கிடக்கும் விழுங்கப்பட்ட விதைகள் என்ற திருக்குமரன் கவிதையிலக்கியம். கடந்த கால தமிழீழ விடுதலைப் போராட்ட காலச்சூழ்நிலையை மிகத்தத்தூருவமாகத்தனது கவிவரிகளினால் வடித்திருக்கிறார். 



போரும் வாழ்வும் மனித இயங்கியல் விதியை உந்திச் செல்வதாயிற்றே. வரலாற்றை வாழவைப்பதற்கு வகுக்கப்பட்ட வழித்தடத்தைப் பின்பற்றி மனிதம் நகர்ந்து செல்கையில் மனித உணர்வுகளின் வெளிப்பாடுகள் கவிதைகளாக பெங்கிப்பிரவாகித்துப்பாய்வதை இந்த நூலில் காண்கிறேன்.

 ஈழமக்களுடைய ஒன்றுபட்ட கலைஇலக்கிய வாழ்க்கையும் போர்க்கால இலக்கியப் பதிவுகளுமே போராட்டத்தின் உயிர்த்துடிப்புள்ள கருப்பொருட்களைக் படைப்பாளிகளுக்குக் கொடுத்ததனால் இவற்றின் துனையோடு போராட்டத்தை முன்னெடுத்து நகர்த்திச் செல்லவல்லதும், மக்கள் மனதைக் கவரக்கூடியதுமான புறப்பொருள் மரபின் வழியைப்பின்பற்றிய  தாயகக் கவி புதுவையின் கவி வரிகள் ஈழத்துப் புறநானூறாகத் தோற்றம் என்பதை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

அத்தகைய ஈழத்துப் புறநானூற்று பிரம்மாவின் கவிவரிகளை முலைப்பாலாக அருந்திய திருக்குமரனின்  உள்ளத்து உணர்வின் வெளிப்பாடு எத்தகையதோ?

இந்த கவிதை மலரை வியாசருடைய பார்வைகளுக்கூடாகப் பார்ப்பதிலே தான் பெருமைப்படுகின்றேன். இக்கவிதைகள்... புதுவையின் சாயலை ஒத்திருப்பதுவும், அவருடைய கவித்துவ ஆளுமையின் வீச்சு
இந்தக் கவிஞனை எந்த அளவிற்கு ஆட்கொண்டிருக்கின்றது. என்பது திருக்குமரனின் கவிதைவரிகளினூடாகப் புலப்படுகின்றது.




படைப்புக்களால் தான் பாதைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. படையல்களால் தான் தாளம் தவறாத மெட்டுக்கள் முளைவிட்டு எழுகின்றன. படைப்புக்களால் தான் சமுதாய நீரோட்டம் வீச்சம் பெறுகின்றன.
படைப்புக்களால் தான் என்னையும் உங்களையும் இணைத்துக்கொள்ள முடியும் என்ற எண்ணக்கருவையும் எங்கிருந்தாலும் காலத்திற்கேற்ற கருத்துக்களைச் சொல்லிவிட வேண்டும் என்று துடிப்பும், எழுதத்துடிக்கும் இளைய தலைமுறைக்கு இந்தக் கவிஞர் ஓர் எடுத்துக்காட்டு

விழுங்கப்பட்ட விதைகள்   ஆம்.... ஓர் சுதந்திரவிடியலுக்காக வீறுகொண்ட ஓர் இனத்தை அகிலமே தன்னுடைய ஆயுத பலத்தினால் பூனையால் உருட்டப்பட்ட சுண்டெலியாக சுருட்டி வாயிலே போட்டு விழுங்கி விட்ட மறுபக்கத்தின் அங்கலாய்ப்பு..........

தேசிய வாழ்வுக்கான அடித்தளத்து எண்ணங்களை,
ஓன்றுபட்ட மக்களுடைய உணர்வுகளை, இலட்சிய உறுதிகளையும்
நடந்துவந்த பாதைகளையும் விடுதலையின் வீரியங்களையும்
அதர்மத்தின் முதலைவாயிலே ஆழ்ந்துகிடக்கும்
ஓர் இனத்தினுடைய வலிசுமந்த வரலாற்றுப் பதிவுகள்.........
போரின் வலிகளும் அவலங்களின் எழுச்சிகளும்
திரும்புதலுக்கான வழித்தடங்களும்
தமிழினத்தினுடைய நோக்கமும் சுவடுகளும் ஏன்?
முள்ளி வாய்காலுள் மூடப்பட்டிருக்கும்
எம்தேசத்துமக்களுடைய எதிர்பார்ப்புக்களும்
நாளைய விடுதலையின் நம்பிக்கைகளும்
விழுங்கப்பட்ட விதைகளாய்
முழுமையோடு மொட்டு அவிழ்த்து முளைகிளப்பி
நாளை முகடுகளைத்தொடுகின்ற
காலப்பதிவுகளின் தூறலுக்காக இங்கே கவிகளாகக் காத்துக்கிடக்கின்றன............


''சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை ''

என்ற தத்துவரிகளை...............
முதல் கவிதை சொல்கிறது...

அதுதான் சொல்லுக்குள்ளே
எண்ணங்களின் இயக்கங்களையும்,
உணர்வுகளின் அசைவுகளையும்
பதித்துவிட்டால், அது சமுதாய நீரைலைக்குள்ளே
எதிர்நீச்சல் போட்டு இல்லாதவற்றை நிரப்பிவிடப்போகிறது....

திரும்பலுக்கான சாத்தியங்கள் 13


தாயகத்திலிருந்து தூக்கிவீசப்பட்ட ஒரு தேசிய இனத்தின் ஒரு தொகுதி மக்கள் கூட்டத்தின் ஆழ்மனது ஆசை திரும்பவும் சொந்த மண்ணில் வாழவேண்டும் இந்த  ஆசையோடுதான் திரைகடலோடியும் திரவியம் தேடிக்கொண்டிக்கின்றது எம்மினம். வாழாவிடத்து இறப்பேனும் அந்த மண்ணில் நிகழவேண்டும் இது இறுதி ஆசை இதை.

 ''பூமிப்பந்தின் எந்த மூலையிலிருந்தும் எத்தனையோ தோழர்கள் திரும்பிவிடுவோம் என்ற உறுதியில்தான் துருவங்களைக் கடக்கின்றனர்'' 

அவ்வாறே ஈழத்தமிழினத்திற்கே உரித்தான குணாம்சம், தன்னம்பிக்கை இங்கே,,,


''எமக்கான பருவம் என்று ஒருநாள் வரும் அன்று கூட்டம் கூட்டமாய் நாங்கள் கூடுதிரும்புவோம். எங்கள் மண்ணும் காற்றும் வயல்வெளிகளும், மரங்களும் எங்களுக்காகத்தான் தோழர்களே காத்துக்கிடக்கின்றன'.''

என்ற கவிவரிகள் என் மனதில் புதிய நம்பிக்கைiயைப் பிறக்கச் செய்கிறது. 

அதுமட்டுமல்ல 'என்னுடைய குழந்தைக்கு நான் யார் என்பதை உணர்த்த தவறிவிடும்போது அடுத்த தலைமுறை அடையாளம் தெரியதாவர்களாக ஆக்கப்பட்டுவிடுவார்களே!...' என்ற ஆதங்கம்
ஒவ்வொரு கவிதையிலும் பட்டுத்தெறிப்பதை படிக்கின்றவர்கள் உணர முடியும்.

சமுதாய மாற்றத்திற்கான வேரூன்றல்களிலே மண்ணினுடைய நினைவுகளின் அசைவுகளாய்..... !
உறுதியான தளங்களை வேர்களுக்கூடாக பண்பாட்டு நீரைப் பாச்சிவிடவேண்டும் என்ற கருத்துக்களாய்...!
அடிமைத் தளைகள் அறுப்பதற்கு இன்னமும் பரந்த வெளிகளைத் தாண்ட வேண்டும் என்ற தொலை நோக்குப் பார்வைகளாய் விரிந்து செல்கின்றன.....

தேங்கிக்கிடந்த நீர்தேக்கத்திலிருந்து
புதிய கிளைபரப்பி ஆறொன்று தானாக வழிசமைத்து ஓடுகிறது...
அந்த ஆற்றின் வழிகள் அடர்ந்த புதர்களைத் தாண்டி
தொடர்ந்து ஓடுவதைக் காணமுடிகிறது
அந்த ஆற்றுக்குப் பாதையமைத்துக் கொடுத்தது யார்?

அதுபோலத்தான் அடியோடு போர்புயலால்
வேரோடு சாய்கப்பட்டவர்களாய் இருந்தாலும்
புதிய பாதையை அமைப்பதற்கு தற்போது
எதையும் இழக்கவும் தாயராக இருக்கவேண்டும்
என்ற வழிகாட்டல்களைக் கவிதைகள் சுட்டிக்காட்டுகின்றன........

''இழப்புக்களைச் சந்திக்காதவர்களுக்குஇழப்புக்களின் வலிகள் அழுத்தங்களைத் தருவதே இல்லை...''. 


என்ற தார்மீக உணர்வுகளை தட்டி எழுப்பும் கவிவரிகள்....
நதியொன்று ஊற்றெடுத்துப் பாய்வது போன்ற
இனிமையான நடை கவிதைகளுக்கு உயிரூட்டிச் செல்கின்றன.......




வாழ்தலுக்கான ஆசை 


இக்கவிதை என் நெஞ்சைத் தொட்டகவிதை. அந்தச் சூழலை நானும் என் கண்முன்னே கண்டுணர்ந்தவன் என்பதனாலென்னவோ என்னை ஆழமாகப் பாதித்தது.

கடந்த கால் நூற்றாண்டில் பிறந்து வளர்ந்த ஒவ்வொரு ஈழத்தமிழனும் முன்னேற இருந்த தடைகளைச் சொல்ல ......

'வளர்தலுக்கென எமக்கு வழங்கப்பட்டிருந்த சூழல் மெல்லிய காற்று மேனியை வருட ஏகாந்தமாய் இசையை முனுமுனுத்தபடி கை வீசிச் செல்லும் காலமாய் இருக்கவில்லை'  
அது எத்துணை கடினமான காலவாழ்வு என்பது வெளிப்படுத்துகிறது

அதே கவிதையில் அடுத்த வரிகள் குழந்தை வளர்ப்பில் பெற்றோர் கவனம் எத்தகையது என்பதை     'கிரந்தி எண்ணை சளித்தொல்லை என
ஒவ்வொரு பகுப்பாய் பல்கலை வரைக்கும் சும்மா அவனைக் கொண்டுவர முடிவதில்லை' என்று ஆதங்கப்படுகிறார். பிள்ளை வளர்ப்பில் ஏற்பட்ட இடரை சொல்ல
''ஆட்டாத தலை பார்த்தும் ஆட்கடத்தாத் தெரு பார்த்தும்
கோட்டைச் சமருள்ளும் கொடிய இடப்பெயர்வுக்குள்ளும் மாட்டாது காப்பாற்றி வளர்த்து''

என கொடிய போரியற் சூழலுக்குள் சமூகவாழ்வு எப்படியிருந்தது என கண்முன்னே படம்பிடித்துக் காட்டுகின்றார் கவிஞர்.
இறுதியாக இராணுவக் கொலைவலயத்தினுள் வாழ்ந்த மக்களின் உள்ளக்கொதிப்பை
''வாழ்தலுக்கான எங்கள் இத்துணை ஆசையிலும் மேலானதா கொல்வதற்கான உங்களது தேவை''

 எனக் கேள்விக்குறியோடு முடிக்கின்ற பாங்கு சிறப்பானதே.



பனிப்புகை மனசுக்குள் படர்கிறது 78 


புலம்பெயர் வாழ்வில் அன்னிய கலாச்சாரச்சூழல் எத்தகைய பாதிப்புக்களை ஒவ்வொருதர் மனங்களிலும் ஏற்படுத்தவல்லது  என்பதை கவிஞர் ,,


''மிகையாய் குளிரலையில் மேனி பட்டு வெடுவெடுக்க சதையைக் குறைக்கவென சாலைப் பக்கமாய் சகித்தபடி மெதுவாக நதிக்கரை ஓரத்தால் நான் நடந்து கொண்டிருந்தேன்..''..


''அப்போது அவிழ்ந்த மொட்டின் அங்கத் தளதளப்பில் ....எப்போதும் தெவிட்டாத இளவேனில் ரூபத்தில்.......... பனிப்புகையைக் கிழித்தபடி பௌவியத்தின் உடல் மொழியாள்இனிக்கின்ற தென்னை இளம்பாளைச் சிரிப்போடு என்னைக் கடந்துபோனாளே இங்கொருத்தி......''

(வெள்ளைக்காரப் பெண் ஒன்று அவரை நோக்கி வந்ததை பாடுகின்றார்.)

அந்தக் கவிதையைப் பாருங்கள்......................

''பனிப்புகையாய் நிற்கின்ற பருவப் பவித்திரமே என்னையும் ஓராளாக எண்ணி இம்மண்ணிலே...... ஏறெடுத்துப்பார்த்த இங்கிதமே முதல் பெண்ணே....... நீ என்னை அழைத்த நினைப்பிலே - இப்போது விறைத்த குளிர் விலகி வியர்க்கத் தொடங்குதடி உள்ளம் பொங்கி ஓர்வார்த்தை பேசுதற்கு தொண்டைக்குள் ஏதோ முள்ளாக குத்துதடி.... பேசமுடியாது முழிபிதுங்கி பிதற்குகின்றேன் யாராச்சும் கண்டால் ஊரே சிரிக்குமடி...... ''

அப்பப்பா...!!

''வெள்ளைக்காறியோட வெளிக்கிட்டான் என்று சொல்லி 
என் உள்ளக்கமலத்தாள் ஒப்பாரி வைக்க முன்னம் 
பனிப்பெண்ணே நீ பனியோடு பனியாகப்
படர்ந்து மறைந்திடடி....''.

இங்கே
வாசிப்பவர்கள் விரசங்களைக்கண்டு
வழிதவறிவிடக்கூடாது என்ற
படைப்பாளனுடைய ஏக்கம் இந்தக்
கவிதைகளுக்கு கடிவாளம் பூட்டுகிறது.............

முற்றிய காதல் இரசம் தோய்ந்த வார்த்தைகளை
வரிகளாக்கி, வாசிப்போர் நெஞ்சுகளை
வருடிச்செல்லுகின்ற எண்ணத்தின் உராய்வுகளை கவிகளாக்கும் இவ்இளங்கவிஞனின் கவித்துவம் சிறப்பானதே

''விடுதலை என்பது வலிகள் சுமந்த சிலுவையின் வரலாறு ஆத்ம தாகங்களின் வீச்சம்.......நசிக்கப்பட்டுப் விழிகள் பிதுங்கி நார் நாராய் தசைகள் தொங்கவிடப்பட்டாலும் வெட்டியெறியப்பட்ட வேரறுந்த கதியால்களாயினும் மீண்டும் முளைவிடும் உணர்வுகளை உள்ளேஉணர்த்திக்கொண்டிருப்பதை விழுங்கப்பட்ட விதைகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன....................''.


துயரப்பெருவெளி 


வன்னிமண்ணின் ஒரு மூலையில் உலகம் பார்த்தபடிஇருக்க நடந்த மிகப்பெரும் மனிதப் பேரவலம் ஆம் முள்ளிவாய்க்கால் மண்ணில் கொலைக்களத்தினுள் நடந்த ஊழித்தாண்டவத்தை தன கவிகளினால் வழிப்படுத்தி நெஞ்சமதைக் கனக்கவைக்கும் கவித்தொகுப்பு வன்னி மக்களின் ஆன்ம ஒலி இங்கே கவிதையாக,,,,,

 ''காற்றும் உலகச் செவிகளிலே உரத்துப் பாடும் படியாய் எங்கள் அவலக்குரல்களை அள்ளிச் செல்லவில்லை. வெடியின் அதிர்வில் காற்றுக்கும் வெடித்துச் செவிப்பறை கிழிந்தொழுகி குழந்தை கதறும் அழுகைஒலி வழுக்கிக் காதால் விழுந்ததுவோ''

 என்றும்
 ''தேவையற்ற பொழுதின் போது தென்னையளவு கிளரும் கடலும், மூசிப் பேசும் வழக்கம் நிறுத்தி மூச்சை நிறுத்திக் கிடந்ததுஅலை. தன் கையால் சுற்றி எறிந்தால் அந்தக்கரையில் விழும் கல்லெறி தொலைவில் இருக்குமெங்கள் தொப்புள் கொடிகள் எத்தனை கோடியாயினும் குடிகாறன் மனைவிபோல எதுவும் பேசத்திரணியற்று அறைக்குள் அழுதுகொண்டு சுருண்டு படுப்பது போல கடலும் அவர்களைப் போல தனக்குள் அழுதுகொண்டு கிடந்ததோ அறியேன்'' 

 என்றும், இறுதிக்கவியாக

''கொத்தாய் குலையாய் குடும்பமாய் இன்னும் எத்தனை கொடுத்தும் விடியா மண்ணேஎன்னதான் கேட்கிறாய் இன்னமும்? ஆனால் இறந்த வீரரின் ஆடையைக்கழற்றி பிறந்த உறுப்பினைப் பார்த்து ரசிக்கிறஅறுந்த கேவலச் சாதியே நீங்களும்பறந்து ஓடலைப் பார்த்தபின்னரே இறக்கும் என்னுடல்' 

என வஞ்சினக்கவிதையாக வடித்திருக்கிறார் தன் உள்ளக்குமுறலை

சுதந்திரத்தின் பின்னால் வரும் சோகம் 


எனும் கவிதையிலே
தன்னுடைய வேதனையை சொல்லிப் பிதற்றுவது
போல எனக்குள் ஓர் வலி உணரப்படுகிறது....

சுதந்திரத்திற்கான விடுதலை
போரிலே வீரர்களும்
விடுதலைத்தாகமுடைய நாட்டுப்பற்றாளர்களும்
இலட்சிய உணர்வுடைய தியாகிகளும்
மண்ணிலே விதையாக வீழ்ந்துதான் போவார்கள்............!

அவர்களுடைய சாதனைகளை !
அவர்களுடைய அர்ப்பணங்களை !
அவர்களுடைய இலட்சியங்களை !
தேசப் பற்றுதலை போற்றி
வழிபாடு செய்கின்ற போதுதான்
அந்த இனத்தினுடைய சுதந்திரம்
அர்த்தமுள்ளதாகும் !
என்பதை மறந்துவிட்டாரா கவிஞர் என எண்ணத் தோன்றுகிறது.?

 இருக்காது என நம்புவோம். இது அவருடைய உள்ளத்து உணர்வின் வெளிப்பாடு

அவருடைய மனமும் எண்ணமும் தாங்கிய
வலிகளின் துயரம் என்றே நான் கருதுகின்றேன்...........

எமது விடியலுக்கான பதிவுகள்
எமது மக்களுடைய அழிவுகள்
பெற்றவர்கள் குழந்தைகள் கணவன் மனைவி
அழிவுகளும் பிரிவுகளும் ஆட்கொள்ளும்போது
கவிஞருடைய மனமும் உருகிவிடுவதை
எழுதுகின்றபோது கவிஞர் சலித்துக் கொள்கின்றார்.............


''தப்படா இந்தப் பிறப்பு தவறடா இந்த வாழ்கை எங்களை எப்படா சேர்ப்பாய் - என்னுயிர்தனை எப்படா மீட்பாய் ....''..                             

என்ற வருந்துதலை
முருகனுக்கு விண்ணப்பிக்கும் பாங்கு
கண்ணீரை வரவழைக்கின்றது,

கவிஞர் திருக்குமரன்.இதுவரையும் போரின் ஓர்மத்தை விடியலின் வீரியத்தை
திரும்புதலுக்கான வழிகாட்டலை புதிய உலகத்தைப் படைக்கும் விவேகத்தை கூறியவர் விதியை நம்புவதுபோன்ற வேதனையை இந்தக்கவியில் காணுகின்றோம்......இருந்தாலும் இந்தக் கவிஞனும் ஒரு தமிழன்....
அதையும் விட ஒரு மனிதனல்லவா?

ஊன்றிவிட்டுச் செல்லுங்கள் 33


தாயகத்தில் தமிழர் இறைமை முள்ளிவாய்க்காலில் மூழ்கியபின் முடியிழந்த மக்களின் முனகல்கள் எத்தகையது. இந்த முனகல்களின் பின்னால் மூச்சிரைத்து முடங்கிப்போய் முடியும் என எதிர்பார்கக் முடியாதே. ஆண்டதமிழினம் மீண்டும் ஆள முனைவது தவிர்க்க முடியாததொன்றே.

'அடைக்கதவாய் இருந்து அர்ப்பணித்த தேனீக்கள்
விடைபெற்ற நாளிலிருந்து வீட்டிற் கதவில்லை.
வேண்டியவன் வந்துவிட்டும் போகின்றான். தேனீக்கள் கொடுக்கெடுத்து கொத்திக் கலைக்காது என்ற தடித்திமிர் வேடனுக்கு'.என்றும்  'குழந்தைத் தேனீக்கள் தூங்குகின்றன. அவர் வளர்ந்து தோற்றம் பெற்றவுடன் திறப்பர் கையுறதல்'  

என நிகழப்போகும் மறுமலர்ச்சியை தனது கவிவரிகளால் குறியீடாகக் காட்டுகிறார்.  

இது நடக்கும் 

என்ற கவிதையிலே 

காலம் இடைவெளியை நிரப்பாமல் விட்டது கிடையாது. மானிட வாழ்வியல் ஓட்டம் எங்கேனும் தடைப்பட்டு நிற்கமாட்டா. அதன் வழித்தடம் முடிவின்றி தொடர்ந்து செல்லும் மனித இனத்தின் மானிட விடியலுக்கான போராட்டம் தொடர்ந்து செல்லும் அது எத்தகைய தடைகளையும், உடைத்தெறிந்து முன்னோக்கிச் செல்லும் இந்தக் கால ஓட்டத்தில் மிக அற்புதமான மனிதர்கள் வருவார்கள், போவார்கள், வரலாற்றுடன் சங்கமிப்பார்கள். சிலர் புதிய வரலாற்றைத் தொடக்கி வைப்பர். வரலாறு சிலரை தொடக்கிவைக்கும் இவ் மானிட இயங்கியல் வழித்தடத்தைப் பின்பற்றி மனித சமூகம் எதிர்கால வாழ்வுக்காக வீறுநடை போடும்.  இவ் சமூக ஓட்டத்தை தன் கவிவரிகளினால்

'நீண்ட போராட்ட நெடுவழியில்
மண்ணுக்காய் மாண்ட வீரர்கள்
மனவலிமை தமிழினத்தின் ஓர்மத்தைத் தூண்ட
இடைவழியல் ஏற்படும் தடைகளெல்லாம்
சுக்கு நூறாகி காற்றோடு போக
வீரம் மிக்கதொரு புதிய படை தோன்றும்
விடுதலைக்கான பாதைகளை
விவேகமுடன் அமைக்கும்......'' 

என்ற ஓட்டத்தோடு 

'அன்று தான்திறந்த வானில் இருந்து பிறந்து வருவதுபோல்ஒருவன் இறங்கி வருவான்அவன் அடுத்த படை நடத்திச் செல்வான்'  


என தன் கவிவரிகளினால் புதிய தேசம் ஒன்றின் பிறப்பினை அதன் இயக்கத்தை வெளிப்படுத்திக் காட்டுகிறார் 

இவருடைய கவிவரிகள் இலக்கியப்பார்வையில் பார்ப்பவர்களுக்கு கவிச்சுவை மிகுந்த படைப்பாக பார்பர். சாமானியர்கள் மனதை நெகுழவைக்கும் கவிதை என்பர்.. இலட்சியவாதிகள் இனத்தின் அரசியல் அபிலாசை என்பர். எல்லாவற்றிற்கும் மேலாக பொதுமை வாதிக்கள் வரலாற்றின் எதிர்வு கூறலென்பர்.

ஆனால் இக்கவிஞனோ தன் மனஉணர்வுகளையும், தான்பட்ட வலிகளையும், தன்சமூகத்தின் துன்ப துயரங்களையும் அந்தச் சமூகம் எதிர்நோக்கி இருக்கின்ற வாழ்வியல் இடர்பாடுகளையும் இவற்றிற்கான தன் உள்ளார்ந்த தீர்வுகளையும், தன் கவிவரிகளினால் கொட்டித்தீர்த்திருக்கின்றார் என்றே சொல்லாம்.

ஆக மொத்தத்தில் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய பொக்கிசமாகும்.


நன்றி
 அ.மயூரன்.


0 கருத்துரைகள்: